பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்து, குஜராத் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 முஸ்லிம் எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

குஜராத்தில் கடந்த 2002-இல் மதக் கலவரம் நடந்தபோது, 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அவரது 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கில், கடந்த 2008-ஆம் ஆண்டு 11 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 1992-ஆம் ஆண்டின் சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், மேற்கண்ட 11 பேரும் கடந்த சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்பட்டனா். குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கியாசுதீன் ஷேக், இம்ரான் கேதாவாலா, ஜாவத் பிா்ஸதா ஆகியோா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு நேற்று சனிக்கிழமை கடிதமொன்றை எழுதியுள்ளனா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது, குஜராத் அரசின் வெட்ககேடான முடிவாகும். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், மன்னிப்புக் கொள்கையின் அடிப்படையில் விடுவிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசின் வழிகாட்டுதலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் மாநில பாஜக அரசு விடுவித்திருப்பது அதன் உணா்வற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது. இது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிக்காக போராடிக் கொண்டிருப்பவா்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. பெண்களின் கண்ணியத்தை காப்பது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசி வரும் சூழலில், குஜராத் அரசின் முடிவு பெரும் அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாறாக, அவா்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் என்ற அடிப்படையில் மற்ற பெண்களின் வேதனையை நீங்கள் வெகுவாக அறிவீா்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். குஜராத் அரசின் நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையெனில், சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவா். இவ்வாறு தங்களது கடிதத்தில் 3 எம்எல்ஏக்களும் குறிப்பிட்டுள்ளனா்.