தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்: சீமான் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மீனவர்களின் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் மீனவர்களின் உயிரிழப்பும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுக மறுசீரமைப்பு பணியை தொடங்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 மீனவர்களை உயிர்பலியாகி உள்ள தேங்காப் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு மீனவர்களோடு கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:-

இந்த துறைமுகத்தை கட்டும் பொழுது கடலோடு வாழும் மக்களிடம் கருத்து கேட்காமல் இந்த நிலத்தினுடைய தன்மை, நீரோட்டத்தின் உடைய சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் அரசு தன்னிச்சையாக கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் கட்டுமான பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 300 மீட்டர் முகத்துவாரம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 40 மீட்டர் அளவில் அமைக்கப்பட்டதால் படகுகள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டு விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இங்கு உள்ள அலை தடுப்பு சுவரை திட்டமிட்டு அன்று அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல. தொடர்ந்து வருகின்ற ஆட்சியாளர்கள். மீனவ மக்களை ஏமாற்றுகிறார்கள். குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றவுடன் இந்த நாட்டையே கொந்தளிக்க செய்தார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் நிராகரிக்கப்பட்ட மக்களாக உள்ளனர். தற்போது அரசு தரப்பில் மறு சீரமைப்புக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். என்றைக்கு மத்திய அரசு இந்த திட்டத்தை ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ஒக்கி புயலில் கடலில் மிதந்த மீனவர்கள் உடலை கூட எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முன்வராத மத்திய, மாநில அரசுகள், இந்த விஷயத்தில் மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.