தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு நாளில் சபதம் எடுப்போம் என திமுக எம்.பி கனிமொழி கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.பி கனிமொழி பேசியதாவது:-

தமிழர்களின் வாழ்வு தமிழர்களின் விடுதலை, தமிழர்களின் பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடக்கில் இருந்து வரலாறு எழுதப்பட்டது தான். அதனால் தான் தென்னிந்தியாவின் தியாகிகள் மற்றும் நமது பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இடம்பெற வில்லை.
உண்மையான வரலாற்றை உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். தமிழர்களின் தொன்மை, வாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழகத்தில் நடைபெற்ற கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஒன்றிய அரசை எதிரித்து கேள்வி கேட்கும் முதல் இயக்கமாக திமுக உள்ளது. எல்லோருக்கும் வழிகாட்டியாக தமிழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் சரித்திரத்தை மீட்டெழுதும் நிலையில் உள்ளோம். தொடர்ச்சியாக தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இட ஒதுக்கீடு இல்லாமல் செய்வதற்காக சில சக்திகள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் தான் நமது முதல் எதிரிகள். நமது சித்தாந்தம் அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஜாதியால், மதத்தால் பிரிக்க நினைப்போர்க்கு இடம் கொடுத்து விடக்கூடாது. இதை ஒண்டிவீரன் நினைவு நாளில் சபதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது. எந்த காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். திமுக மற்றும் திராவிட கருத்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தால் வடக்கிலிருந்து யாரும் இங்கே கால் வைக்க முடியாது. இந்த உணர்வுடன் பழக வேண்டும்.தமிழர்கள் வலிமையுடன் இருக்க நினைக்கும் ஆட்சி திமுக. இதற்கு நீங்கள் பாதுகாப்பு அரணாக நிற்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: –

அடிமட்டத்தில் இருந்த இந்த இனம் ஒண்டிவீரன் புகழால் உயர்த்தப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் முதல் முழக்கம் இந்த ராஜபாளையம் அருகே உள்ள நெற்கட்டான்செவல் பகுதியில் உள்ள மாவீரன் பூலித்தேவன், அவரது படைத்தளபதி ஒண்டிவீரன் ஆகியோரிடம் இருந்துதான் துவங்கியது. வடக்கே இருந்து சுதந்திரப் போராட்டம் துவங்கியது என்ற நிலையை மாற்றி, தென்பகுதியில் இருந்து தான் சுதந்திரப் போராட்டத்தின் முதல் முழக்கம் தொடங்கியது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

பூலித்தேவனும் ஒண்டிவீரனும் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று ஜாதி மத பாகுபாடு இல்லாமல் நாட்டிற்கு போராடியவர்கள். சுதந்திர போராட்டத்தில் இவர்களின் பங்கு மிகவும் உயர்ந்தது. இவர்களுக்கு மூன்று சதவீத தனி இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். இதன் காரணமாக தற்போது இவர்கள் சமுதாயத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் உயர் பதவியில் இருப்பதற்கு கலைஞரின் இட ஒதுக்கீடு தான் காரணமாக அமைந்தது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.