தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ராமர் பாலத்தை (மணல் திட்டுகள்) புராதான சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே மணல் திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த திட்டுகள் தொடர்ச்சியாக இருப்பதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் அடிப்படையில் இது கடவுள் ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய இலங்கைக்கான பாலம் என்கிற கருத்தும் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் கட்டிய பாலம் என்கின்றனர் நம்பிக்கையாளர்கள். இந்த ராமர் பாலம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டிருக்கிறது.
இந்துத்துவவாதிகள் ராமர் பாலம், ராமர் பாலம் என பேசிய போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்படி ஒரு பாலம் கட்டுவதற்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் இந்துத்துவவாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நாடு முழுவதும் கருணாநிதியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்தான் கருணாநிதியின் தலைக்கு இந்து தீவிரவாதிகள் விலைவைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.
சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முனையும் போது எல்லாம் தமிழகத்தின் நலனுக்கு எதிரானவர்கள் இந்த ராமர் பாலம் விவகாரத்தை முன்வைப்பதும் வழக்கமாக இருந்தது. இலங்கையின் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்க 83 கி.மீ ஆழத்துக்கு கால்வாய் உருவாக்கி கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதுதான் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். அப்படி செய்யும் போது இலங்கையின் கொழும்பை சுற்றி அரபிக் கடலுக்கு கப்பல்கள் செல்லாமல் வங்க கடல் வழியாகவே சென்றுவிடலாம். இதன் மூலம் தமிழகம் பெருமளவுக்கும் வளமடையும். ஆனால் பல அமைப்புகள் சேதுக்கால்வாய் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்து வருகிறது. இந்த மனு மீது விசாரணை நடைபெறும் பலமுறை தகவல்கள் வெளியாகியும் விசாரிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு தாங்கள் தலையிட வேண்டுமா என்றும், இது அரசின் கொள்கை விவகாரம் தானே என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.