திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டத்தி ஈடுபட்டனர்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலை இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உட்பட பல்வேறு இடங்களில் மாநகர போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் மற்றும் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.