அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு கொடுப்பதை கண்டித்தும் மலைகளை உடைத்து கேரளாவுக்கு கனிமவள கொள்ளை நடப்பதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:-
நாங்கள் எதை கேட்கோறோமோ அதை அரசு செய்யவில்லை. இலவசம் கொடுத்து 50 ஆண்டுகால இந்த இரு கட்சிகளும் மாறி மாறி கொடுத்து ஏமாற்றி வருகிறது. அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
கமிஷன் அதிகம் பெறவே ஆட்சியாளர்கள் அதிக இலவச திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தை நடத்த முடியாமல் மக்கள் திணறும் நிலை இந்த ஆட்சியில் நடந்து வருகிறது. இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம். மிக்சி, கிரைண்டர் அல்ல. எல்லத்தையும் இலவசமாக கொடுக்கும் அரசு தண்ணீரை மட்டும் விற்பனை செய்து வருகின்றது. உயர் நிறுவனங்களுக்கு கொடுக்கும் தடையற்ற மின்சாரத்தை மக்களுக்கு கேட்கிறோம். எங்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். படித்து விட்டு லட்சக் கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலவசம் பெறாமல் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு நாள் ஒரு கிலோ அரிசி வாங்க வழி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டனர். இந்த சேவல் தற்போது கூண்டுக்குள் இருந்து கூவுகிறது. ஓரு நாள் கூரை மேல் இருந்து கூவும் அப்போது அதிகாரம் கைக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.