ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திடீரென நடைபெற்ற மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கல்வி உதவித்தொகை சம்பந்தமாக நடைபெற்ற போராட்டத்தில் இந்த மோதல் வெடித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான 2 ஆண்டு நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி கூறியதாவது, “2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகையை விடுவிக்க கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சங்கத்தின் மாணவர்கள் சிலர் காலை 11 மணியளவில் உதவித்தொகை துறைக்கு சென்று உதவித் தொகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இங்கு வந்த பல்கலைக்கழக காவலர்கள் சிலர் மாணவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதாக ஏபிவிபி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏபிவிபி அமைப்பின் பல்கலைக்கழக தலைவர் ரோஹித் குமார் காவலர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “முன்பு 17 பணியாளர்கள் இருந்த நிலையில், தற்போது நான்கு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த துறையின் நிலை இதுதான். மாணவர்கள் உதவித் தொகை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்படுகின்றனர்” என்று கூறினார். இந்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில், நிர்வாக அலுவலகத்திற்கு எதிராக உள்ள மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் வெளியில் தள்ளுவது தெளிவாக தெரிகிறது. இந்த மோதலின் முடிவில் ஆங்காங்கே ரத்தக்கறைகளும், ரத்தம் தோய்ந்த ஆடைகளின் கிழிசல்களும் இருப்பதும் தெரிகிறது. காயமடைந்த சில மாணவர்கள் தங்களுடைய காயங்களை காட்டி இதற்கு காவலர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளனர். புகார்களுக்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தவறான வாக்குறுதிகளை கொடுப்பதாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் உதவித்தொகை கிடைக்கும் வரை நிர்வாக அலுவலகத்தைவிட்டு செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்துதான் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த அறிக்கையையும் பல்கலை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.