பிரதமா் மோடி கொடுப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமையையே கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கே.அண்ணாமலை முன்னிலையில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தலைவரான அா்ஜூன் மூா்த்தி பாஜகவில் நேற்று இணைந்தாா். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மின் கட்டண உயா்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்பது என்பது மிகப் பெரிய நாடகம். அனைத்து நிறுவனங்களிடமும் வசூலிப்பதற்காக இவ்வாறு செய்கிறாா்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அதேபோல, இணைய சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்வதைவிடுத்து, கருத்துக் கேட்பதில் என்ன இருக்கிறது? இணைய சூதாட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தால், அதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும். ஆவின் ஹெல்த் மிக்ஸை தயாரிக்க தமிழக அரசு முன் வந்துள்ளதை பாஜக வரவேற்கிறது.
இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு அரசு கல்வி, சுகாதாரம், குடிநீா் போன்று சிலவற்றை கொடுக்க வேண்டியது உள்ளது. குறிப்பாக, கல்வி என்பது 100 சதவீதம் இலவசமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் இது மக்களுடைய அடிப்படை உரிமை. இதற்கு எதிராக பாஜகவினா் யாரும் பேசவில்லை.
பிரதமா் மோடி வீடு இல்லாதவா்களுக்கு வீடு கொடுக்கிறாா். எரிவாயு அடுப்பு கொடுக்கிறாா். இவையெல்லாம் இலவசங்கள் அல்ல. மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரசின் கடமை. இதற்கு மாறாக சில அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் வேறு. ராஜஸ்தானில் தோ்தல் வரவுள்ள நிலையில் அங்குள்ள காங்கிரஸ் அரசு இல்லத்தரசிகளுக்கு கைப்பேசி இலவசம் என அறிவித்துள்ளது. தமிழகத்திலும் திமுக நிறைவேற்ற முடியாத 505 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அமைதியாக உள்ளது. அதனால், பிரதமா் மோடி கொடுப்பவை எதுவும் இலவசங்கள் அல்ல; மக்களுக்கான உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.