உச்ச நீதிமன்றத்தில் இலவச திட்டங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் திமுக வழக்கறிஞரிடம் தலைமை வழக்கறிஞர் காட்டமாக பேசியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
தலைமை நீதிபதி: இந்த விவகாரத்தில் பிரச்சனை இருப்பதை யாரும் மறுக்க முடியாது ? இந்த விவகாரம் கொள்கை சார்ந்த விவகாரம் அதனால் தலையிட முடியாது என கூற முடியுமா? உதாரணமாக ஏதாவது சட்டம் இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா ? எனவே தான் இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம் , அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்போம் பின்னர் முடிவு செய்யலாம் என்றே கூறுகிறோம்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: இந்த விவகாரத்தில் பொருளாதார நிலை தொடர்பாக முதலில் நாம் விவாதிக்க வேண்டும்
தலைமை நீதிபதி: தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று தான். பா.ஜ.க, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர். எனவே இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் தற்போதைய மனுவை காரணியாக எடுத்து, அனைத்து விதத்திலும் விவாதிப்போம்.
மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் : இந்த இலவசம் விவகாரத்தில் பல்வேறு வகை உள்ளது. குறிப்பாக ஒரு கட்சி சேலை தருவதாக அறிவிக்கிறது, இலவச மின்சாரம் அறிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது. எனவே தான் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தலைமை நீதிபதி: இலவசம் விவகாரத்தில் தேர்தல் சமயத்தில் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால் மொத்தமாக பிற நேரத்திலும் இலவசம் அறிவிப்பு என்பதை தான் நாம் முக்கியமான விசயமாக எடுத்து கொள்ள வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்: ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநிலத்தின் கடன் தொகையே அதிகரிக்கிறது, இது மாநில வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும் இந்த இலவசங்கள் என்பது ஊழலுக்கு வழி வகுக்கிறது. தேர்தல் நேர இலவசம் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து கொள்ளும் என தெரிவித்தால், அது தொடர்பாக சில உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் இலவசங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கருத்து இருக்க வேண்டும். மேலும் இந்த இலவச அறிவிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். குறிப்பாக தேர்தல் இலவச வாக்குறுதிகள் இவ்வாறு தொடர்ந்தால் அது மாநிலத்தின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும், பாதளத்துக்கு எடுத்து செல்லும்.
தலைமை நீதிபதி: இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள மொத்தமாக இலவசம் அறிவிப்பு தொடர்பாக கட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறோம். மேலும் ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்? இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சனையாக கருதுகிறீர்கள்? ஆனால் தேர்தல் இலவசத்தை தாண்டி அரசன் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடை வழங்குவது அவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்ற, அதேபோல கிராமப்புற மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடைய எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை, இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களை நாங்களும் அறிவோம்.
தலைமை நீதிபதி: (தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம்) நீங்கள் ஆதரவாக களமிறங்கும் தி.மு.க கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். எனக்கு இது தொடர்பாக பல விசயங்கள் கூற வேண்டியுள்ளது. மேலும் பல விவகாரங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து அறியாமல் இருப்பதாக நினைக்க வேண்டாம்.
மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்: ஆம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்றம் குறித்து தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல!
வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.