லாலு பிரசாத் யாதவ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

பீகார் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், இந்த புதிய கூட்டணி அரசு இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய புலனாய்வுத்துறை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்பி மற்றும் எம்.எல்.சி வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 2004 முதல் 2009 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்து வந்தார். அப்போது பணியாளர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அஹ்மத் அஷ்ஃபாக் கரீம் மற்றும் பீகார் மாநில சட்டமேலவை உறுப்பினர் சுனில் ஆகியோர் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. இன்று காலை இருவரது வீடுகளுக்கும் சென்ற சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்றிரவு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர், “பீகாரில் அதிகாரத்தை இழந்த பாரதிய ஜனதா கட்சி கோபத்தில் இருக்கிறது. எனவே சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து சோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில் இன்று சிபிஐ அதிரடி சோதனையை தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து சிபிஐ சோதனைக்கு உள்ளாகி இருக்கும் சட்டமேலவை உறுப்பினர் சுனில் சிங் தெரிவிக்கையில், “இது உள்நோக்கத்துடன் நடத்தப்படும் சோதனையாகும். இதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. இதன் மூலமாக எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பயந்துகொண்டு அவர்களோடு இணைவார்கள் என்று நினைக்கிறார்கள்” என்றார்.