காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் பதவி விலகல்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சமீப காலமாக சில தலைவர்கள் முக்கிய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் கட்சியை மாநிலங்கள் தோறும் பலப்படுத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பிரச்சாரக் குழு தலைவராக கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் நியமிக்கப்பட்ட உடனேயே அவர் அந்த பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, கட்சியின் தேசிய தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நபர்களின் பார்வையானது இளைஞர்களின் சிந்தனையுடன் ஒத்துப்போகவில்லையென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தான் ஓராண்டுக்கும் மேலாக ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் சோனியா காந்தியை சந்திக்க முன்றதாகவும் ஆனால் அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லையென்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் எடுக்ககப்படும் முடிவுகளானது அடிப்படை யதார்த்தத்துடன் ஒன்றிப்போவதில்லை. ஓராண்டுக்கும் மேலாக ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டு வந்தேன். ஆனால் எனக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் கட்சி மக்கள் முன் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டதை ஏற்க முடியவில்லை” என்றும் ஜெய்வீர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தனது ராஜினாமா குறித்து சோனியா காந்திக்கு ஜெய்வீர் எழுதியுள்ள கடிதத்தில், “கட்சி தற்போது இந்த நிலைக்கு மாறியதற்கு காரணம் கட்சியை அண்டி பிழைப்பவர்களே” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களின் ஆதிக்கமே கட்சியில் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா திடீரென ராஜினாமா செய்து நிலையில், தற்போது அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தொடர்ந்து வருகிறது.