இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் அம்ரிதா பன்னோக்கு அதிநவீன சிறப்பு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அம்ரிதா மருத்துவமனை 2,500 படுக்கை வசதிகள் உள்ள சுமார் ரூ.6000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் அமிர்தா மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது. கோவிட் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக நடந்ததற்கு ஆன்மிக – தனியார் கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும் உதவியது. தடுப்பூசி திட்டத்தின்போது, சிலர் தவறான பிம்பத்தை பரப்பினர். ஆனால் நமது ஆன்மிகத் தலைவர்கள் அதை எதிர்த்து கூறியபோது, மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அன்பு, சேவை, கருணை, தியாகம் ஆகியவற்றின் வடிவமாக மாதா அமிர்தானந்த மயி திகழ்வதாக பாராட்டு தெரிவித்த பிரதமர், அவர் நம் அனைவருக்கும் ஊக்கத்தை அளிப்பவராக திகழ்கிறார் எனவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு சென்றார்
இதையடுத்து, பரிதாபாத்தில் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மொஹாலிக்குச் சென்று, முல்லன்பூரில், நியூ சண்டிகர், சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் (மொஹாலி) ‘ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் டாடா மெமோரியல் சென்டரால் 600 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் மருத்துவமனையானது 300 படுக்கைகள் கொண்ட ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனையாகும். மேலும் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் மெடிக்கல் ஆன்காலஜி – கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சை முறைகளும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ளது.