கோவா ஓட்டலில் இறந்த பாஜக நடிகை சோனாலி போகத் மரணத்தில் மர்மம் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக மகளிரணி துணைத் தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் (42), கோவாவில் உள்ள ஓட்டலில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும், சோனாலியின் போகத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 42 வயதில் மர்மமான முறையில் சோனாலி போகத் இறந்ததாகவும், அதனால் அவரது மரணம் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரியான காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்சி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரியானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உதய் பன் வெளியிட்ட பதிவில், ‘சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சோனாலி போகத் திடீரென இறந்துள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
அதேபோல் ஆம் ஆத்மி தலைவர் அனுராக் தண்டா வெளியிட்ட பதிவில், ‘சோனாலி போகத் இறப்பதற்கு முந்தைய நாள் தனது தாயுடன் போனில் பேசியுள்ளார். அப்போது தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எனவே, அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கோரினார்.