காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (75) கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் அவருடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர், எங்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர், எப்போது நாடு திரும்புவார்கள் என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர் 4ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘மேகங்காய் பார் ஹல்லா போல்’ பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மோடி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைக்கவும் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி 148 நாட்கள் 3,500 கி.மீ தூரம் 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் நோக்கி செல்கிறார். இது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஆகஸ்ட் 23) சந்தித்துப் பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்முவுக்கு, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது.