நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி அக்.21ம் தேதி வரை நடைபெற இருந்தது.
இந்த நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. காலியிடங்களை தடுக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தை தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த 2 நாட்களில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.