திருவள்ளுவர் பற்றி உளறுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: சு.வெங்கடேசன்

திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ.யூ. போப் பற்றியும் உளறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசி வரும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அண்மைக் காலமாக திராவிடம், ஆன்மிகம், தமிழ் மொழி என பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆர்.என்.ரவி, இப்போது திறக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. திருக்குறள் பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழக ஆளுநராக நான் பதவியேற்ற பிறகு, எனக்கு திருக்குறள் புத்தகமே அதிக அளவில் பரிசாக கிடைத்தது. திருவள்ளுவரை பொறுத்தவரை உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி. முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார். ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர். மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்” என்று சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.