ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. சுமார் 5 ஆண்டுகள் ஆறுமுகசாமி ஆணையம் சார்பாக மொத்தமாக 154 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், சசிகலா தரப்பினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். சசிகலா நேரில் வராத காரணத்தால் எழுத்து பூர்வமாக பதில் பெறப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஜெயலலிதா மரணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்து, அதன் மீது விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.