அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக சீரியல் கில்லர்: அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக ஒரு சீரியல் கில்லர் என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

தொடர்ந்து 14 மணி நேரம் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தியும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. நகைகளோ, பணமோ, சொத்து ஆவணங்களோ, குற்றவியல் ஆவணமோ எதுவும் கிடைக்கவில்லை. இது ஒரு பொய்யான சோதனை. இப்போது வரை கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், மத்திய பிரதேசம், பீகார், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா போன்ற பல அரசாங்கங்களை பாஜகவினர் கவிழ்த்து உள்ளனர். நகரத்தில் ஒரு ‛சீரியல் கில்லர்’ தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக கொலை செய்வது போல் ஆட்சியை கவிழ்க்கின்றனர். மக்கள் அரசை தேர்வு செய்தால், இவர்கள் கவிழ்க்கிறார்கள். அவர்கள் பல எம்.எல்.ஏ.,க்களை வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என மக்கள் கேட்பதாக எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. பாஜகவின் ‛ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்து விட்டது என்பதை மக்களுக்கு காட்ட, ஒரு நம்பிக்கைத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வர விரும்புகிறேன்.

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அனைத்து தேச விரோத சக்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். குஜராத் தேர்தல் வரை எங்கள் மீது பொய் வழக்குகளை போடுவார்கள். இதுவரை 277 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வந்துள்ளதாக கணக்கிட்டு உள்ளோம். ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 20 கோடி ரூபாய் கொடுத்தால், 5,500 கோடி ரூபாய்க்கு எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி உள்ளது. அதனால் தான் பணவீக்கம் அதிகரித்து, எம்.எல்.ஏ.,க்களை சாமானியர்களை விலைக்கு வாங்க பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, வரும் திங்கட்கிழமை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.