தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்கக்கட்டணம் உயர்த்தும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காண சுங்கக்கட்டண உயர்வு செப்.1 முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார், வேன், ஜீப்களுக்கு ரூ.5ம், டிரக், பேருந்து, இதர வாகனங்களுக்கு ரூ.150 வரையும் உயர்த்தப்படவுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, போக்குவரத்து சேவை கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என்ற வரிசையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தன் பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த ஆண்டு செப். மாதம் சுங்கக் கட்டண உயர்வு குறித்து சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, 60 கிமீ-க்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும். இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம். இதில் முதற்கட்டமாக, 10கிமீ சுற்று எல்லையில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடையும் நிலையில், அதே நிலைமைதான் தொடர்கிறது. விதிகளுக்கு ஏற்ப சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். எனவே, உயர்த்தப்படவுள்ள சுங்கக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.