பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உள்நாட்டிலேயே குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதானது. இவரை போன்றே கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை துறந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓட வேண்டியதானது. சிங்கப்பூர், தாய்லாந்து என தஞ்சம் அடைந்திருந்த அவர், கடந்த மாதம் தான் மீண்டும் இலங்கை திரும்பினார்.
இந்த நிலையில், ராஜபக்சே குடும்பத்தினரின் நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தலைநகர் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்ற சாமி, ராஜபக்சேவுடன் தனியாக சில நிமிடங்கள் உரையாடினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்து, அவருடன் சுப்பிரமணியன் சாமி கலந்துரையாடினார். ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.