தேனியில் உள்ள எம்பி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பாக அவரது பண்ணை மேலாளர்கள் இருவரை வனத்துறை கைது செய்துள்ளது.
தேனி பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு தேனி எம்பியும் ஓபிஎஸ்ஸின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன பகுதியையொட்டி உள்ள தோட்டம் என்பதால் இங்கு வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதை தடுக்க மின் வேலி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த தோட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மின்வேலியில் சிக்கியிருந்த அந்த சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது அது அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அப்போது வனத்துறை ஊழியர் மகேந்திரனை தாக்கிவிட்டு சென்றுவிட்டது.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்த பகுதியில் மின்வேலியில் சிக்கியிருந்த சிறுத்தை உயிரிழந்து கிடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களை அழைத்தனர். அங்கு சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திலேயே அந்த சிறுத்தை புதைக்கப்பட்டது. இந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் எம்பியின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுத்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் சிறுத்தை உயிரிழந்தது எப்படி என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் முதற்கட்டமாக பண்ணை மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். ஓபி ரவீந்திரநாத்தின் தோட்டத்திற்கு அடிக்கடி சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை தடுக்கவே மின் வேலி அமைக்கப்பட்டதாகவும் அதில் சிக்கியே இந்த சிறுத்தை உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.