ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று புதுடெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மகாத்மா ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், ‘மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். காந்தி ஜெயந்தி என்பது, அமைதி, சமத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் காந்தியடிகளின் எழுச்சியூட்டும் வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு நாம் அனைவரும் நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.