உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள், கான்பூர் மாவட்டத்திற்கு, டிராக்டர் இழுவை வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர். கட்டம்பூர் என்ற இடத்தில் டிராக்டர் இழுவை வாகனம் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென்று இழந்து சாலையோரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பலியானோர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
டிராக்டர் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.