பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும்: பிரேமலதா

ஓசி பயணம் என்ற கருத்துதொடர்பாக, ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆம்னி பஸ் முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில்தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள், ஆம்னி பஸ்சில் செல்லலாம். ஏழை மக்கள் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என அமைச்சர் சொல்கிறார். இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு ரூ.4 ஆயிரம் என்றால், அதன் பிறகு ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். எல்லாமே வியாபாரம் என்றால் இந்த அரசும் வியாபார ரீதியாக நடக்கிறதா? இது மக்களுக்கான அரசாக இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது கண்டனத்திற்குரியது. அரசு பஸ்களை தரமாக வைத்தால் மக்கள் அரசு பஸ்களில் பயணிப்பார்கள்.

பெண்கள் இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். இதை அ.தி.மு.க.வினர் வேண்டுமென்று செய்ததாக ஒரு புறம் கருத்து பரவி வருகிறது. ஒரு அமைச்சர், பெண்கள் ஓசியில் பயணிக்கிறார்கள், என்கிறார். மற்றொருவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு இப்போதுதான் சில்லரை மாற்றுகிறோம், என்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வெற்றிக்குப்பின் ஒரு நிலைப்பாடு. இலவச பயணம் வேண்டாமென்று பஸ்சில் மூதாட்டி கூறியதுபோல், ஒட்டுமொத்த தமிழக பெண்களும் புறக்கணிக்க வேண்டும். அப்படி புறக்கணித்தால்தான் ஆட்சியாளர்களுக்கு அது பாடம்புகட்டுவதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.