ஆற்காடு வீராசாமியை நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கடந்த பல மாதங்களாகவே வயது மூப்பின் காரணமாக ஆற்காடு வீராசாமி வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதனிடையே மருத்துவமனை செட்-அப்பில் கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கேர் டேக்கர்களும் வீட்டிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான கலாநிதி வீராசாமி மருத்துவர் என்பதால் அவரே அவரது தந்தையை கவனித்துகொள்கிறார். இந்நிலையில் ஆற்காடு வீராசாமியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, மா.சுப்ராணியன், ஆகியோர் இன்று நண்பகல் அவரது வீட்டுக்கு சென்றனர். தன்னை நலம் விசாரிக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும் நெகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளை அசை போட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.

இதனிடையே இந்தச் சந்திப்பின் போது நாளை மறுநாள் திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு கொடுக்கவிருக்கும் தகவலையும், அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு பற்றிய விவரத்தையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார். மேலும், உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும் ஆற்காடு வீராசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கூறியிருக்கிறார். ஆற்காடு வீராசாமி வகித்த பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு கொடுக்கவுள்ளதால் அவரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.