பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் செய்த குறுவை சாகுபடி பயிர்கள் தற்போது பெய்த மழையினால் பெருமளவு சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க கணக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், பூர்த்தி செய்து கொடுக்கும் வகையில் உதவிகள் செய்ய வேண்டும். மிக முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் ரூ. 2,500 வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டின் மூலம் விவசாயிகள் பெறக்கூடிய பயன்கள் அவர்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறைபாடு உள்ளது.

பயிர் காப்பீடு செய்வதற்கும் அதன் பயன் விவசாயிகளுக்கு காலத்தே கிடைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் குறுவை சாகுபடியையும் சேர்த்து விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு, மாநிலத்தில் எங்கெல்லாம் பயிரிடப்பட்ட பயிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளதோ அதை காலம் தாழ்த்தாமல் கணக்கீடு செய்து , உரிய இழப்பீடானது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றாலும் நெல் மூட்டைகள் இன்னும் முழுமையாக கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் தேவையான எண்ணிக்கையில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, பாதுகாக்க வேண்டும். நெல்லுக்கு உரிய விலையையும் கொடுத்திட வேண்டும். எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு கொடுத்தும், நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் மூட்டைகளை பாதுகாத்து, கொள்முதல் செய்து , உரிய விலையை கொடுத்தும் விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.