வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்ற உடன், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள், முப்படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
முன்பு, பயங்கரவாதிகளின் மையமாக இருந்த இந்த பகுதி, தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக முப்தி மற்றும் அப்துல்லா, அவரது மகனும் ஆட்சி செய்தனர். ஆனால், வீடில்லாத ஒரு லட்சம் பேருக்கு வீடு வழங்க எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. ஆனால், தற்போது 2014 – 22 வரை அவர்களுக்கு, மோடி ஆட்சியில் வீடு வழங்கப்பட்டுள்ளது. மோடி மாடல் நிர்வாகத்தில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. குப்கர் மாடலானது, இளைஞர்களின் கைகளில் கற்களும் துப்பாக்கியும் தான் கொடுக்கப்பட்டன. மோடி மாடலுக்கும், குப்கர் மாடலுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்ற உடன் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும்.
கடந்த ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின் தங்கியிருந்தது. ஆனால் 3 குடும்பத்தினர் மட்டுமே பலன்பெற்றுள்ளன. ஆனால், அரசின் திட்டங்கள் மூலம் ஏழைகள் பயன்பெறுவதை மோடி உறுதி செய்துள்ளார். காஷ்மீர் முதலீட்டில் பெரிய பயன்பெற்றுள்ளது. 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், என்னுடைய கட்சித் தொண்டரின் திருமணத்திற்குச் செல்ல முடியாமல் நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். முன்னாள் முதல்வரின் அடிப்படை உரிமையே எளிதாக பறிக்கப்படும்போது சாமானியர்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.