திமுக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை. துன்பமும், வேதனையும் அனுபவித்து வருகின்றனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அமமுக.,வினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக.,வில் இணைந்தனர். பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் குறித்து சிலர் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கவில்லை என தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதி, விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். மற்றபடி தடை பிறப்பிக்கவில்லை. பொதுச்செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை.
திமுக ஆட்சி மெத்தனமாக நடந்து வருகிறது. அதிமுக திட்டப்பணிகளை திறந்து வைத்து வருகிறார்கள். பெரிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்துள்ளனர். சட்ட கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்து வருகிறார்கள் முடிவுற்ற பணிகளைத்தான் திறந்து வைக்கிறார்கள். பாலங்களை திறந்து வைக்கிறார்கள்.
ஆனால் கோவையில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் அறிவித்துள்ளனர். ஆனால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. காரணம் கமிஷன் அதிகம் கேட்பதாக தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. 2021ம் ஆண்டு பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் திமுக எதையும் நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். 50 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது .சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில், காவிரி பிரச்னையில் பார்லிமென்டில் குரல் கொடுத்து போராடினோம். ஆனால் திமுகவினர் நீட் தேர்விற்கு எந்த குரலும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.