கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

இதுமட்டுமல்லாமல் இந்த சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ், கேரள கூலிப்படையைச் சோ்ந்த சயன், வாளையாறு மனோஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா். சம்பவம் நடந்த சில நாள்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் அந்த ஆண்டு மே மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராகவும், கண்காணிப்பு கேமரா பராமரிப்பாளராகவும் இருந்த தினேஷ்குமாா் அதே ஆண்டு ஜூலை 3ம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல்துறைக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்குத் தொடா்புடைய அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வந்தனா். அதில் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட முக்கிய பிரமுகா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கேரளா, கா்நாடகா உட்பட பல்வேறு இடங்களில் தனிப்படையினா் சுமாா் 316 நபா்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கையும் ஷகீல் அக்தர்தான் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.