100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

கட்சியை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள் என்றும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை இந்த தமிழக அரசு வேகமாக துரிதமாக நிறைவேற்றினால் விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றலாம். அதை இந்த அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

நிர்வாக திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அது நிரூபணம் ஆகியிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை மழைக்காலங்களில் பணிகளை செய்தால் கனமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படுவார்கள். இதையெல்லாம் சரியாக முறையாக கடைப்பிடிக்காதத காரணத்தால் சென்னையில் பலவேறு வீதிகளில் பள்ளத்தை தோண்டிவிட்டு அந்த பணியை தொடராமல் இருப்பது வேதனைக்குரியது. இந்த பணியை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும்.

அதிமுக வலிமையாக இருக்கிறது. 33 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. சிலபேர் வேண்டும் என்றே திட்டமிட்டு சிலபேரின் தூண்டுதலின் பேரிலே இந்த கட்சியை பிளக்கவோ உடைக்கவோ பார்க்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்காது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. விசாரணை விரைவில் முடியும். விசாரணை முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள். 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.