எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வில் தமிழ் எங்கே?: எம்.பி கனிமொழி கண்டனம்!

எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி இல்லாதது குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்விற்கு சிஜிஎல்(CGL) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் பி பிரிவில் பல்வேறு துறைகளுக்கான Assistant அல்லது Executive Assistant பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30. இது Pay Level 8 முதல் பல்வேறு மட்டங்களில் சம்பளம் பெறுவோருக்கான அறிவிப்பாக அமைந்துள்ளது. இதில் Tier-II அளவிலான தேர்வில் அப்ஜக்டிவ் டைப், மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது டுவிட்டரில், பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை ஆனது அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை எனக் குறிப்பிட்டுள்ளார்.