இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திராமணி பாண்டே, இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான 13-வது அரசியல் திருத்தம், மாகாணத் தேர்தல்களில் நடத்துவது தொடர்பில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனை விரைவாக செயல்படுத்த இந்தியா, இலங்கையை வலியுறுத்தும். தமிழர்களின் உரிமைகளை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமைகள் ஆணையத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு எதிரான இத்தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இத்தீர்மானத்தை எதிர்த்து 7 நாடுகள் வாக்களித்தன. அதேநேரத்தில் இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

இது தொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழர்களின் உரிமைகளை காத்தல், 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றல், விரைவில் மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தி போதுமான அதிகாரங்களை அளித்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அவற்றை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

2012ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஏழு முறை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாக்களிக்காமல் இவ்வாறே இந்தியா புறக்கணித்திருக்கிறது. கடந்த கால காங்கிரசு அரசு கையாண்ட நடைமுறையையே தற்போதைய பா.ஜ.க அரசும் பின்பற்றுவது தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் இரு கட்சிகளுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை என்பது நிறுவப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த 20 நாடுகளைப் பாராட்டுகிறேன். நியாயமாக இத்தகைய தீர்மானத்தை அண்டை நாடான இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மேலும் பல நாடுகள் ஆதரவளித்திருக்கும். இதன்மூலம் இலங்கை அரசுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகமாகி அதன் விளைவாக ஈழத் தமிழர்களின் துன்பம் ஓரளவு குறைக்கப்பட்டிருக்கும்.

இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு ஈழத் தமிழர்களைக் கைக் கழுவியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவு கொள்ளுமே தவிர, ஒருபோதும் இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக இருக்காது. இந்த உண்மையை இந்திய அரசு உணரவேண்டும். இல்லையேல் வட எல்லையில் மட்டுமல்ல, தென் எல்லையிலும் சீனாவின் அபாயம் இந்தியாவை அச்சுறுத்தும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள், சிங்களப் பேரினவாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் அறியும். ஆனால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு வழக்கம் போல் புறக்கணித்துள்ளது. இதற்கான பொருள் என்னவென்றால், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு பக்க பலமாக, இந்திய ஒன்றிய அரசு துணை நிற்கும் என்பது தான். ஒன்றியத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அவர்கள், சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பார்களே தவிர, மறந்தும் கூட தமிழர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

கடந்த1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை, சிங்களத்தில் ஈழத்தமிழின அழிப்பை தனது அரச கொள்கையாக முன்னெடுத்து, மனித உரிமைகள் வன்முறைகள், போர் குற்றச் செயல்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தபோது, இந்தியா ஒன்றிய அரசு, உரிய நேரத்தில் அதனைத் தடுக்கத் தவறியதன் விளைவாக, 1,76,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரை இனஅழிப்புக்குள்ளாகினர். அப்போது வராத ஒன்றிய அரசா, ஈழத்தமிழர்களை இப்போது காப்பாற்ற போகிறது?.

ஈழத்தமிழர்களின் தாயகத்தின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து ஒழிப்பதையே இன்றுவரை தங்கள் அரசியல் கொள்கையாகத் தொடர்கிறது. ஆக, ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்களுக்கு, எப்போதும் இந்திய ஒன்றிய அரசு துணை நிற்காது. மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் என்பது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்பே கணித்தது தான். இந்திய ஒன்றிய அரசின் இந்த நிலைபாட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.