இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக எச்சரித்து உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா உட்பட பல வளரும் நாடுகளும் கொரோனா பாதிப்பிற்குப் பின், இப்போது கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்து உள்ளது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் இப்போது 82.37 என்ற அளவில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ப சிதம்பரம், இதன் பின்னரும் இதர காரணங்களால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது என்றும், தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும் என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலில் பொருளாதாரத்தைக் கண்டு மத்திய அரசு மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பொருளாதார மந்த நிலைக்கு உக்ரைன் போரே காரணம் என்று சொல்லப்படுவது குறித்துப் பேசிய அவர், “இதனால் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிடுமா? நான் 2013இல் அமைச்சராக இருந்த போது இப்படி காரணத்தை நான் சொன்னேனா? அமெரிக்கா தான் காரணம் என்றும், 2008 சர்வதேச நிதி நெருக்கடிதான் அப்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்குக் காரணம் என்ற காரணங்களைச் சொன்னேனா?

நீங்கள் தானே அதிகாரத்தில் இருக்கிறீர்கள். உக்ரைன் போர் போன்ற வெளிப்புற சவால்களை எதிர்கொண்டு பொருளாதாரத்தைக் காக்க வேண்டியது உங்கள் கடமை தான். இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்து உள்ளது. மற்ற நாடுகளின் நாணயங்களை விட இந்திய ரூபாய் சிறப்பாக உள்ளதாகச் சொல்வதை ஏற்க முடியாது. இந்தியாவின் தனிநபர் வருமானம் அந்த நாடுகளுக்குச் சமமாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாங்கள் பலவீனமாகவும் ஏழ்மையாகவே இருக்கிறோம். வறுமையில், குழந்தை இறப்பு விகிதம் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது. ஏற்றுமதியைக் காட்டிலும் நமது இறக்குமதி அதிகமாக உள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கு நாம் பயன்படுத்தும் அனைத்தையும் இறக்குமதி தான் செய்து வருகிறோம். முழுமையாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நான் சொல்லவில்லை. பாதிப்புகளை அரசு நினைத்தால் தடுக்கலாம். 2012, 2013 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் ரூபாய் வேகமாக வீழ்ச்சியடைந்தது. ஆனால், மீண்டும் அதை மீட்டு எடுத்தோம். பதவியில் இருந்து நாங்கள் விலகும் போது, அதை 58.4க்கு கொண்டு வந்தோம். இதற்கு நாங்கள் பல நடவடிக்கை எடுத்தோம். இப்போது அதேபோன்ற நடவடிக்கை தேவை. முதலீட்டை அதிகமாக ஈர்க்க வேண்டும். நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையேயான வேறுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பெட்ரோல் விலையே விலைவாசி ஏற்றத்துக்கு முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு சுயநலமாக செஸ் வரியை அதிகமாக வைத்து உள்ளது. இந்த செஸ் வரி என்பதை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. ஜிஎஸ்டி விகிதங்களும் அதிகமாகவே உள்ளது. இன்று சில்லறை பணவீக்கம் 7 ​​சதவீதமாகவும் மொத்த விலை பணவீக்கம் 12 சதவீதமாகவும் உள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முதலில் நாம் விழித்திருக்க வேண்டும். அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது. அரசு எழுந்து காபி குடித்துக் கொண்டு வேலையைத் தொடங்கட்டும். இந்தாண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்து உள்ளது. அதுவே அடைய முடியுமா என்பது சந்தேகம் தான். நாட்டில் ஏழ்மை நிலை இருக்கிறது. அதை ஒழிக்கும் வரை இலவசங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏழ்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.