தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ரம்மி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட இளைஞர் இதில் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் நமது சமூகத்தில் கொடிய நோயைப் போலப் பரவி வருவதாகவும் இதைத் தடை விதிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
சூதாட்டம் விளையாட்டிற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்பதால் இருக்கும் இதனைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதனடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இருப்பினும், இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அந்த வழக்கில் தமிழக அரசின் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் இளைஞர்கள் மீண்டும் ஆன்னலைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே தற்கொலை சம்பவங்களும் நிகழத் தொடங்கின. இதனால் மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்யச் சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான அவசர சட்டத்திற்குக் கடந்த செப். 27ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்தச் சூழலில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதியே இந்த தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அக்.1ஆம் தேதி இது தொடர்பான கோப்பு ஆளுநர் மாளிகைக்குச் சென்றதாகவும் அன்றைய தினமே இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
பணத்தை வைத்துச் சூதாடும் விளையாட்டுகளுக்கு இந்தச் சட்டம் மூலம் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் உடனடியாக ஆன்லைன் சட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம் வரும் அக்.17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அன்றைய தினமே இது தொடர்பாக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அதை முதல்வரே கொண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.