அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் பயணித்தவர் அக்கட்சியின் முன்னாள் எம்.பி., மைத்ரேயன். அணிகள் இணைப்புக்கு பின்னர், பெரிதாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். மேலும், மைத்ரேயனுக்கான முக்கியத்துவத்தை ஓபிஎஸ் கொடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால், அவ்வப்போது தனது வருதத்தை மறைமுகமாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டும் வந்தார்.

இந்த நிலையில், அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளாது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தற்போதைய பஞ்சாயத்துகள் பெரிதானதும் முக்கியமாக சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன. கடந்த முறை இபிஎஸ் பக்கம் இருந்த வைத்திலிங்கம் இந்த முறை ஓபிஎஸ்ஸின் தளபதியாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், ஓபிஎஸ் பக்கம் இருந்த கே.பி.முனுசாமி இபிஎஸ் பக்கம் சென்றுள்ளார்.

அந்த வகையில், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மேடையிலும் அமர்ந்திருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர் மைத்ரேயன், மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். மேலும், “அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் தான் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் அழைத்து என்னை நலம் விசாரித்தார். மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பியுள்ளேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு அளித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கப்பட்டுள்ளார்.