இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது ஏராளமான விடுதலைப்புலிகள் பிடிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைதான் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த 2 முக்கிய கோரிக்கைகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்வைக்கப்பட்டன. சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்குதேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, மந்திரிசபை ஒப்புதல் அளித்து விடடது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. 20 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், நமது வர்த்தகத்தை, வரக்கூடிய உதவிகளை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலைக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொதித்தெழுந்தனர். அது இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்தது.
இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர மீது நிதி முறைகேடு, தவறான பொருளாதார மேலாண்மை குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா என்ற அமைப்பும், இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னேயும், இன்னும் சிலரும் வழக்குகளை தொடுத்தனர். இலங்கை பிரதமர் முன்னாள் நிதி மந்திரி பாசில் ராஜபக்சேயும், மூத்த அதிகாரிகளும்கூட குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூரியா, நீதிபதிகள் பூவனேகா அலுவிகாரே, விஜித் மாலல்கோதா, தேகிதெனியா அமர்வு விசாரித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணய மதிப்பை ரூ.203 என நிர்ணயித்த இலங்கை நிதி வாரியத்தின் முடிவு, சர்வதேச நிதியத்தில் நிதி உதவி கோரியதில் ஏற்பட்ட தாமதம், அன்னியச் செலாவணி கையிருப்பை பயன்படுத்தி 500 மில்லியன் டாலர் கடன்பத்திரங்களை (சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி) தீர்த்தது உள்ளிட்டவை தொடர்பாக கணக்கு தணிக்கையர் தணிக்கை செய்து, இது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பாசில் ராஜபக்சே, மந்திரிசபை, நிதி வாரியம், மத்திய வங்கி முன்னாள் கவர்னர்கள், முன்னாள் நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட தகவல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நகல்களை மத்திய வங்கி கவர்னர் டாக்டர் நந்தலால் வீரசிங்கே தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.