சொத்து குவிப்பு வழக்கு: ஆ. ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017ம் வருடம் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை. தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். இந்த தீர்ப்பிற்கு எதிராக சிபிஎல் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது சொத்துகுவிப்பு வழக்கில் தனியாக ஆ. ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 1999 ஆண்டு பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ. ராசா மீது புகார் வைக்கப்பட்டது. அமைச்சர் பதவியை பயன்படுத்தி இவர் கூடுதல் சொத்துக்களை சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ஆ. ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் 2015ம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 2015ல் ரெய்டு நடத்தப்பட்டது. 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நிலையில் இந்த ரெய்டும் சேர்த்து நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மொத்தம் 16 பேர் மீது அப்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

ஆ ராசாவிடம் இது தொடர்பாக நீண்ட நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்தே ஆ. ராசா, அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்று 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ இத்தனை நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. முக்கியமாக ஆ. ராசாவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ 5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர் மட்டுமின்றி மொத்தம் 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.