ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் எனக்கு தாலி கட்டினார் என்று எழுதியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்க கடத்தல் சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன. நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தின. இச்சம்பவத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தங்க கடத்தல் விவகாரம் கடந்த மாதங்களாக பெரிதும் பேசப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுய சரிதை புத்தகம் பெரும் பரபரப்பையும் கேரள அரசியலில் அனலையும் கிளப்பியிருக்கிறது. ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஸ்வப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனினின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். கோவிலில் வைத்து தாலி கட்டிய சிவசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டதாகவும் தன்னை ஒருநாளும் பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ததாகவும் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
அதேபோல், முன்னாள் அமைச்சர் ஒருவர் வாட்ஸ் அப் சாட்டில் தன்னை பாலியல் உறவுக்கு பலமுறை அழைத்தததாகவும், ஆனால் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஸ்வப்னா சுரேஷ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். பல்வேறு பரபரப்பு தகவல்களை ஸ்வப்னா சுரேஷ் தனது சுயசரிதையில் எழுதியிருப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.