ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான்

இந்திதான் ஆதிக்கம் செலுத்துமென்றால், இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஐஐடி, ஐஐஎம், மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டுவைக்கும் பேராபத்தாகும். இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்?

அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் மத்திய அரசின் செயல் மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும். பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கொடுஞ்செயல்.

ஆரிய மொழியான இந்தியைத் திணிப்பதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையாவும் இந்துத்துவாவுக்கு கிளைபரப்பவும், இந்தியாவை இந்திக்காரர்களுக்கு மட்டுமேயான நாடாக மாற்றவும் உதவுமே ஒழிய, இந்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துளியளவும் நன்மை பயக்காது. ஒரு மனிதனின் சிந்தனை மேம்பாட்டுக்கும், திறமை வெளிப்பாட்டுக்கும் தாய்மொழி வழிக்கல்வியே உகந்தது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உலகெங்கும் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசின் இந்தித்திணிப்பு முயற்சியானது வெறும் நுகர்வு மந்தைகளாக இந்நாட்டு மக்களை ஆக்குவதற்கான வேலைத்திட்டமேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரு மொழியைத் திணித்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடாமல் மிக கவனமாக செயல்பட வேண்டும். மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்று ஒவ்வொன்றாகத் திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டநாள் நிலைக்கப்போவதில்லை. 400 ஆண்டுகளைக் கூடத் தொடாத இந்தி மொழிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய மத்திய அரசு, 50000 ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்மொழிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லையே ஏன்? இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்று இந்திய ஒன்றியத்தின் பிரதமரே கூறுகிறார். உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்கிறார். ஆனால் இதுவரை இந்திய அரசு எதுவொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்து அங்கீகாரம் அளித்துள்ளது? எனவே, பல இனங்கள், பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இந்த நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. உண்மையில் ஒரே மொழியைத் திணிப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் பாஜக ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள்.

உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பெரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி, உயிரீகம் செய்திட்ட தமிழின முன்னோர்களின் செங்குருதி இந்நிலமெங்கும் சிந்தப்பட்டிருக்கிறது. அந்நிலத்தில் அந்நிய மொழியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதியோம் என்பதே தமிழர்கள் உலகுக்கு உரைக்கும் பேரறிவிப்பாகும். தமிழர்களின் தொன்மையும், பெருமையும், ஆதி நாகரீகத்தின் உச்சமும் கீழடிக்குக் கீழேயும், ஆதிச்சநல்லூருக்குக் கீழேயும் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை அகழாய்வு செய்து உலகுக்கு முரசறிவிக்க முனையாத இந்திய மத்திய அரசு, தமிழர் நிலத்தில் இந்தியை இறக்குமதி செய்ய முற்படுமேயானால் அது மிகப்பெரிய எதிர்வினையைத் தமிழர்களிடமிருந்து ஏற்படுத்தும். எங்கள் மூதாதையர்களான நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை ராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் போராடி உயிர்நீத்த தமிழ்மண்ணில் இந்தித் திணிப்பையும், அதன் ஆதிக்கத்தையும் அவரது வழிவந்த மானத்தமிழ் பிள்ளைகள் ஒருபோதும் அனுமதியோம்!

ஆகையினால், அந்நியமொழிக்கு வேர்பரப்புகிற வேலையைக் கைவிட்டுவிட்டு, மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளுக்கே முதன்மைத்துவம் தரப்பட இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பல தேசிய இனங்கள் வாழும் பெரும் நிலப்பரப்பான இந்திய ஒன்றியத்தை ஆளுகை செய்து வரும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டாலும், அம்முடிவினை ஏற்றுக் கொண்டாடித் தீர்த்தாலும் தமிழ் மண் போர்க்கோலம் பூண்டு, வன்மையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்; தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

ஆகவே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். இத்தோடு, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித் திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு இந்தியாவின் துணையோடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை இச்சமயத்தில் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.