தமிழகத்தின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் பார் உள்ளதால் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பாக அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில் டெண்டர் கோரி விண்ணப்பிக்கும்போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று நிர்பந்திக்கவில்லை எனவும், டெண்டர் இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபந்தனைகள் மட்டுமின்றி அனைவருக்கும் டெண்டர் படிவம் வழங்கப்படவில்லை என மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரித்தார். அப்போது, நீதிபதி பல்வேரு கருத்துகளை தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட்டில் பிறப்பித்த டாஸ்மாக் பார் அமைக்க உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார். இதுபற்றி நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
மதுவிலக்கு சட்டம் 1937ல் கொண்டு வந்தாலும் கூட அரசின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை. தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனையை துவங்கிய பிறகு இதுவரைக்கும் 5 ஆயிரத்து 358 மதுபான கடைகள் இயங்கி வருவதாகவும், இந்த கடைகள் மூலம் மதுவிற்பனையை ஒழுங்குப்படுத்த மட்டுமே பல்வேறு விதிகளையும், உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.
2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முறையும் டாஸ்மாக் பார் டெண்டர் அறிவிக்கும்போது டெண்டர் நடைமுறை தொடர்பாக ஒவ்வொரு முறையும் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இதனால் டெண்டர் நடைமுறையில் ஏதோ சிக்கல் உள்ளதாக தெரிகிறது. தற்போதைய வழக்கில் டெண்டர் திறந்த பிறகு 7 நாட்களில் வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தவறான நடைமுறை. இதனால் இந்த டெண்டரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பார் அமைக்க இட உரிமையாளரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம். இதனால் டெண்டர் விடுவதற்கு முன்பே தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் டெண்டர் நடைமுறையில் வெளிப்படை தன்மையை பின்பற்றும் வகையில் அனைத்து டெண்டர் நடைமுறைக்கான அனைத்து டாஸ்மாக் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமரா முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். புதிய டெண்டர் வெளியிடும்போது நில உரிமையாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தடையில்லா சான்று பெற வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.