ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் மேலும் ஒரு திரிணாமுல் எம்எல்ஏ கைது!

மேற்கு வங்காளத்தில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே திரிணாமுல் கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மேலும் ஒரு எம்.எல்.ஏவை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த பார்த்தா சட்டர்ஜி மீது ஆசிரியர் நியனத்தின் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டதில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமானவரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் மட்டும் ரூ.21 கோடி ரொக்கமாக கைப்பற்றப்பட்டது தேசிய அளவில் தலைப்புச் செய்திகள் ஆகின. முறைகேடு வழக்கில் பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை, பார்த்தா சட்டர்ஜியின் வாட்ஸ் அப் சாட்டில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்தி வந்தது. இதில் அந்த வாட்ஸ் அப் சாட்டில் பலஷிப்ரா தொகுதி எம்.எல்.ஏ பட்டாச்சார்யா பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் பட்டாச்சார்யாவுக்கும் தொடர்பு இருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதையடுத்து பட்டாச்சார்யாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நேற்று விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடந்த நிலையில் நள்ளிரவு பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டார்.

மம்தா பானர்ஜியின் முந்தைய ஆட்சி காலத்தில் பார்த்தா சட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஆசிரியர் நியமனங்களுக்கு பணம் பெற்றதாகவும் பட்டாச்சார்யாவும் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு இருப்பது மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.