இந்தி திணிப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தி மொழியைத் திணிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நாடாளுமன்றக் குழு சமீபத்தில் அளித்த பரிந்துரை ஒன்று சர்ச்சையானது. அதாவது, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அங்குள்ள உள்ளூர் மொழியைப் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது. மேலும், ஆங்கிலத்தை ஆப்ஷனலாக வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நாட்டில் பல மொழிகள் உள்ளன. ஒரே மொழியைத் தேசிய மொழியாகக் கூற முடியாது. இதன் காரணமாக உயர்கல்வி மையங்களில் இந்தி மொழியை முக்கிய பயிற்று மொழியாகத் திணிக்க முடியாது. நாட்டின் கணிசமான பிரிவினரைப் பாதகமான நிலையில் வைக்கும் எந்தவொரு முயற்சியும் சமூகத்திற்கு நலனைத் தராது. இது நாட்டில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இந்தியாவில் நடக்கும் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினர் பிற மொழிகளைக் கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றாலும், மொழியைத் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தேவையான தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறது. கலாசார, மொழி மற்றும் மத வேறுபாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் காரணமாகவே நாம் ஒரே தேசமாக இருக்கிறோம். எங்கள் உயர் கல்வி மையங்களில் இந்தியைப் பயிற்று மொழியாகத் திணிக்க முடியாது. கல்வித் துறையில் மாநிலம் சார்ந்த அம்சங்களை அங்கீகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசர கதியில் முடிவு எடுக்கக் கூடாது.
அரசியலமைப்பில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய அரசு அரசு ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாகத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நமது கூட்டாட்சி தத்துவ அமைப்பிற்கு நல்லதல்ல. இவ்வாறு பினராயி விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.