வந்தே பாரத் 4ஆவது விரைவு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இமாச்சலப் பிரதேசம் உனாவிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில் 4-வது ரெயில் சேவையை இமாச்சல பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோல அவர் உனாவில் உள்ள ஐ.ஐ.டி.யை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதோடு மருத்துவ பூங்காவுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 4-வது வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிறகு உனாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இமாச்சல பிரதேசத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிசுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மருந்து, கல்வி மற்றும் ரெயில்வே திட்டங்கள் பிராந்தியத்தின் முன்னேற்றத்தால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை எனது அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. 20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளின் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். இதற்கு முந்தைய அரசுகள் மக்களுக்கு வசதிகளை வழங்கவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் (இரட்டை என்ஜின் அரசு) மருந்து பூங்காவில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இமாச்சல பிரதேசத்தில் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி நடைபெறும்போது மருந்துகள் மலிவாகிவிடும். இவ்வாறு மோடி பேசினார்.

பின்னர் சம்பா பகுதியில் 2 நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கிராம சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் சென்றது இது 9-வது முறையாகும். வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ள குஜராத், இமாச்சலபிர தேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை சோதனையிட்ட அவர். உனா ரயிலை நிலையத்தையும் ஆய்வு செய்தார். இந்த ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளுக்கு வசதியான மற்றும் வேகமான பயணத்தை வழங்கவும் உதவும் எனவும், உனாவிலிருந்து டெல்லிக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.