ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாசாரத்தை பிரதமர் மாற்றிவிட்டார்: ஜே.பி.நட்டா

ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணிகளை ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடங்கி உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து இந்த பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் நேற்று உள் விளையாட்டு அரங்கு ஒன்றை திறந்துவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது. இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன. போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஊழல் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால் இன்று உலகுக்கு இந்தியா ஆயுதங்களை விற்பனை செய்கிறது. தற்போது ஆயுத விற்பனை 6 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் ஆயுத கொள்முதலில் நிகழ்ந்து வந்த ஊழல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்.

இதைப்போல பிலாஸ்பூர் எய்ம்ஸ் கட்டுமானப்பணி 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கட்டுமானப்பணிகள் நடைபெறாத போதும், ஆஸ்பத்திரி பணிகள் வேகமாக நடந்து முடிந்துள்ளன. இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

இதைப்போல மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநிலத்தில் ஜெய்ராம் தாக்கூர் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளை பட்டியலிட்ட அவர், இமாசல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா அரசு தொடர வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.