தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே அவ்வப்போது காய்ச்சல்களும், வைரஸ் காய்ச்சல்களும் பரவுவது சர்வ சாதாரணமானது தான். இந்த நோய்களை கண்டு மக்கள் யாரும் பெரிய அளவில் பயப்பட மாட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. ஆனால், என்றைக்கு கொரோனா என்ற ஒரு வைரஸ் நோய் வந்ததோ, அதிலிருந்து எந்தக் காய்ச்சல் பரவினாலும் மக்கள் மத்தியில் ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. இப்போது கூட தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற சில வைரஸ் காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உண்மையிலேயே, கொரோனாவுக்கு பிறகு புதிய புதிய வைரஸ் காய்ச்சல் பரவுவது அதிகமாகி இருப்பதாகவே தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒரு வழக்கின்போது, இவ்வாறு வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்து நீதிபதி தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், மருந்துக் கடை பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முத்துமாலை ராணி. இவர் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மருந்துக் கடை அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு பின்னர், குரங்கு காய்ச்சல், ‘இன்ஃப்ளூயன்ஸா’ உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இதுபோன்று புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றும் தெரிவித்தார். மருந்து நிறுவனங்கள் – சந்தேகம் மேலும், இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.