ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தலில், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், 25 ஆம் தேதி மனு தாக்கல் முடிவு என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள், 29 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்காதது பற்றி கேட்டதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகள்படி ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் வானிலை போன்ற பல காரணங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச மாநில தேர்தலை நடத்த விரும்புகிறோம். இமாச்சல பிரதேசத்தில் 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.