6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

சவுக்கு சங்கர் இணையத்தில் சவுக்கு ஆன்லைன் என்ற பக்கத்தை தொடங்கி இவர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை வைத்து வந்தார். இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இவர் கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.