பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தவர் சத்ய பிரியா (20). இவர் தி.நகரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோதே சத்யாவின் கையைப் பிடித்து, தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார். சத்யா தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் சதீஷ் என்பவர் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படையும் பரங்கிமலை காவல்துறையின் நான்கு தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஒருதலைக் காதலால் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு ரயில்வே போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.