10% தீபாவளி போனஸ் போதுமானதல்ல என்றும் 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்
தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குறைந்தது 20% ஆக போனஸை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளிக்கு 10% (ரூ.8400) மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது! 2021-22 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக அரசு பேருந்துகளின் இயக்கம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் அதையே கூறி போனஸ் தொகையை 10% என்ற குறைந்த அளவிலேயே வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல!
தீபாவளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்கப்பட வேண்டிய ரூ.10,000 முன்பணத்தை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. தீபாவளிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்பணத்தை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!. இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.