இந்தி திணிப்பு என்பது பொய் என்றும் திமுகவின் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:-
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். 1965ல் இருந்து இதனை தமிழ்நாட்டில் பார்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக திமுக செய்த சாதனை, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளில் தமிழை கூட கட்டாய மொழியாக மாற்ற முடியவில்லை. அதற்கு கூட மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை தேவைப்பட்டது. ஆனால் அதைகூட ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திமுகவிற்கு இல்லை. காரணம் திமுகவினர் நடத்தக்கூடிய பள்ளியில் இந்தி இருக்கிறது.
அதேபோல் மத்திய அரசு அலுவலர்கள் யாரேனும் இந்தியில் கடிதம் எழுதிவிட்டால் கூட அதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசின் துறைகள் ஏதேனும் தவறு செய்தால் கூட பூதாகரமாக்குகிறார்கள். மும்மொழிக் கொள்கை என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. மூன்றாவதாக பிடித்த மொழியை கற்றுக் கொள்ளலாம் என்பது தான் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும், மாநில கொள்கையை உருவாக்கிக் கொள்கிறோம் என்று கிளம்பியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், இந்தியை எங்கேயும் திணிக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடியே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரே அரசியல் காரணங்களுக்காக இந்தியை மெதுவாகதான் கற்றுக்கொண்டார்.
நேற்று திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதற்கான காரணம் அவர்களுக்கு தெரியவில்லை. இந்தப் போராட்டம் படுதோல்வி. உண்மைக்கு புறம்பான போராட்டத்திற்கு மக்கள் கவனம் கொடுக்கப் போவதில்லை. இங்கு மட்டுமல்ல தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தி எதிர்ப்பு என்று நாடகத்தை தொடங்கி, இத்தனை காலம் தமிழ்நாட்டில் நேர்மறையாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் அது திமுகதான்.
இந்தி திணிப்பு என்பதற்கான ஆதாரம் உள்ளதா? இதுகுறித்து முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும். திமுகவின் கபட நாடகம் தான் இந்தி எதிர்ப்பு. இந்தியை யாரும் திணிக்கவில்லை. திமுகவின் இந்தி கபட நாடகத்தை வெளிக் கொண்டு வரும் வகையில், மாவட்ட தலைநகரங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும். இன்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும்.
பாஜக மூன்றாவது மொழியாக பிடித்த மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்த பின்னர், அவர்கள் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி படத்தை விற்பனை செய்வதற்காக, இந்தி நடிகைகளை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்காக, இந்தி திணிப்பு, படம் வெளியிடுவது வேறு பதிலளித்தார்.
திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களை வாங்கி வைத்து, இந்தி படத்தை தான் பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் திணிக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அனைத்து இந்தி படத்தின் உரிமைகளும் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்குவார். அதனால் பொய்யான வாதங்களை திமுக கைவிட வேண்டும். தமிழ், தமிழ் என்று கட்சியை தொடங்கியவர்கள், எதற்காக இந்தி படத்தின் விநியோகத்தை மிரட்டி வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், திமுக நடத்தி வரும் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை விமர்சித்து பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா டுவீட் போட்டுள்ளார். அந்த டுவீட்டில் ”நான் 1964-65 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பார்த்தவன். ஆனால் இன்று திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் ஆதரவோ பங்களிப்போ இல்லாத வெறும் ரோடு சைடு தமாஷாவாக உள்ளதை பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.